சென்னை,
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ கடந்த 15-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று, வசூலிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாதியில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளும், இரண்டாம் பாதியில் இடம்பெற்ற அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரது வருகை ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. படத்தில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே அவரது காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.25 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிருத்திக் ரோஷன் சிறுவயதில், 1986-ம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ என்ற இந்திப் படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அப்போது அவருக்கு 12 வயது. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால், ரஜினி–ஹிருத்திக் கூட்டணியின் இந்தப் படம் ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.