சினிமா செய்திகள்

பாதியில் நின்ற ‘ஜெயிலர்-2’ படம்... ரசிகர்கள் வாக்குவாதம்!

படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கில் இருந்து வெளியே வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள திரையரங்கில் நேற்று ‘ஜெயிலர்-2’ படத்தின் இரண்டாவது காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்-2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது.

எந்திரம் பழுதால் படம் நிறுத்தம்

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள திரையரங்கில் நேற்று ‘ஜெயிலர்-2’ படத்தின் இரண்டாவது காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மதியம் 12 மணியளவில் எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் படத்தின் வசனங்கள் சரியாகக் கேட்கவில்லை. தொடர்ந்து படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கில் இருந்து வெளியே வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரை மணி நேரத்துக்குப் பிறகு பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் எந்திரத்தில் பழுது ஏற்பட்டு படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் மீண்டும் திரையரங்கு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.

பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு படம் மீண்டும் திரையிடப்பட்டது. இந்தச் சம்பவத்தால் மூன்றாவது காட்சியும் தாமதமானது. இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT