சினிமா செய்திகள்

உலகளவில் வெளியாகும் ‘ஜெயிலர் 2’... சிவகார்த்திகேயன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி

சென்னை,

ரஜினி நெல்சன் கூட்டணி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.

‘ஜெயிலர் 2’ படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகிஉள்ளது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஐமேக்ஸ் திரையில் ஜெயிலர் 2

ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் இன்று (15-ம் தேதி) உலகளவில் வெளியாகி உள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் காலையில் இருந்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றி பெற நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது ஆதர்ச நாயகன், எனது உத்வேகம், எனது தலைவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே!

படம் வெளியாகும் நாளுக்கு முந்தைய அந்தப் படபடப்பு, உற்சாகம், தூக்கமில்லாத இரவு என எதுவும் மாறவில்லை. இன்றும் அதே உணர்வை ஏற்படுத்துவதுதான் நீங்கள் நிகழ்த்தும் மாயம், தலைவா! எப்போதும் உங்கள் மீது அன்பு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது சகோதரர்களான இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT