சினிமா செய்திகள்

டி.சி. ஸ்டூடியோஸ் தலைமை பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் கன் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேம்ஸ் கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ கதைகளை வைத்து திரைப்படங்கள் தயாரித்து வரும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் ‘மார்வெல்’(Marvel) மற்றும் ‘டி.சி.’(DC). இந்த 2 நிறுவனங்களும் கடந்த 20-ம் நூற்றாண்டில் காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் ஏராளமான சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்து வந்தன.

காமிக்ஸ்

அபாரமான சக்திகளைக் கொண்ட புதுப்புது சூப்பர் ஹீரோக்களை உருவாக்குவதில் மார்வெல் மற்றும் டி.சி. காமிக்ஸ் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. காமிக்ஸ் உலகை பொறுத்தவரை மார்வெலை விட டி.சி. காமிக்ஸ் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் அதிக வரவேற்பு இருந்து வந்துள்ளது.

திரைப்படங்கள்

ஆனால் சூப்பர் ஹீரோ கதைகளை திரைப்படமாக எடுப்பதில் டி.சி. ஏராளமான சறுக்கல்களை சந்தித்தது. அதே சமயம், மார்வெல் நிறுவனம் தெளிவான திட்டமிடலுடன் ‘மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’(MCU) என்ற பெயரில் வரிசையாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

டி.சி. திரைப்படங்களான பேட்மேன்(Batman), மேன் ஆப் ஸ்டீல்(Man of Steel), வொண்டர் உமன்(Wonder Woman) போன்ற படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மார்வெல் படங்களுடன் வசூல் ரீதியாக போட்டி போடுவதில் டி.சி. தடுமாறியது.

ஜேக் ஸ்னைடர்

இதனிடையே மார்வெல் நிறுவனத்தின் எம்.சி.யூ. திரைப்பட வரிசையைப் போல், டி.சி. நிறுவனமும் டி.சி.இ.யூ.(DCEU) என்ற பெயரில் வரிசையாக திரைப்படங்களை வெளியிட்டது. இதற்கான திட்டமிடல்களை இயக்குநர் ஜேக் ஸ்னைடர் கவனித்து வந்தார். ஆனால் ‘ஜஸ்டிஸ் லீக்’(Justice League) திரைப்படத்தின்போது டி.சி. நிறுவன தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டி.சி.இ.யூ.வில் இருந்து ஜேக் ஸ்னைடர் விலகினார்.

ஜேம்ஸ் கன்

அதனை தொடர்ந்து டி.சி. ஸ்டூடியோஸ் தலைமை பொறுப்பை இயக்குநர் ஜேம்ஸ் கன் ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ‘கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி’(Guardians of the Galaxy) உள்ளிட்ட மார்வெல் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், டி.சி. படங்களுக்கு புதிய வண்ணத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டி.சி. என்றாலே நகைச்சுவை இல்லாத, அழுத்தமான கதைகள்தான் வரும் என்ற நிலையை மாற்ற ஜேம்ஸ் கன் உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றவாறு ஜேம்ஸ் கன், டி.சி. திரைப்பட வரிசையை புதிதாக தொடங்கப் போகிறேன் என்று அறிவித்தார். அந்த வரிசையில் முதல் படமான ‘சூப்பர்மேன்’ கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் காட்சி அமைப்புகள், நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை மார்வெல் படங்களைப் போல் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் ‘சூப்பர்மேன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘சூப்பர் கேர்ள்’(Super Girl) திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. சமீபத்தில் வெளியான ‘கிளேபேஸ்’(Clayface) திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ‘சூப்பர்மேன்’ அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

விலகல்

இந்த நிலையில், டி.சி. ஸ்டூடியோஸ் தலைமை பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் கன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி துணை தலைவர் பொறுப்பில் இருந்த பீட்டர் சப்ரானும் விலகுவதாக அறிவித்துள்ளார். டி.சி. திரைப்படங்களை ஜேம்ஸ் கன் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார் என டி.சி. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவரது திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணிச்சுமை

பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேம்ஸ் கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுதான் உண்மையான காரணமா? அல்லது வேறு டி.சி. நிறுவன தலைமையுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்குமா? என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

புதிய தலைவர்

இந்நிலையில், இனி ஜெரேமி லேட்சம் என்பவர், டி.சி. ஸ்டூடியோஸ் தலைமை பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மார்வெல் நிறுவனத்தின் முக்கிய தலைமை அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஆவார். இவரது தலைமையில் டி.சி. திரைப்படங்களின் பாணி இனி எப்படி மாறப்போகிறது? என்பதே டி.சி. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT