சினிமா செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் தணிக்கை வழக்கை வாபஸ் பெற்ற “ஜனநாயகன்” படக்குழு

‘ஜனநாயகன்’ படக்குழுவினர் படத்திற்கு சென்சார் சான்று கோரி மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.

நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது. சென்சார் போர்டு பரிந்துரைத்த மாற்றங்களை செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

படக்குழுவினர் படத்திற்கு சென்சார் சான்று கோரி மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளனர். படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மறு தணிக்கை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ சென்சார் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டிலிருந்து தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. சென்சார் போர்டின் மறு தணிக்கை குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை ஐகோர்ட் பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.