சென்னை,
நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது.
சென்சார் போர்டு பரிந்துரைத்த சில மாற்றங்களை செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், படத்தின் மொத்த நீளம் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மறு தணிக்கை செய்யப்பட்டு 20 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக பதிவுத்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு, இன்று (10.02.26) சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆஷா முன் முதல் வழக்காக விசாரணை செய்யப்பட உள்ளது.