சினிமா செய்திகள்

’ஜனநாயகன்' தாமதம்: வட்டியுடன் பணத்தைத் திருப்பியளிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு?

விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க முடிவெடுத்து இருப்பதால் படம் தற்போதைக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. கடந்த மாதம் ஜனவரியில் பொங்கலுக்கு முன்பாக படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சென்சார் பிரச்சினையில் சிக்கி தற்போது வரை ரிலீஸ் தேதி தெரியாமல் உள்ளது.

ஓடிடி ஒப்பந்தம் ரத்து; இணையத்தில் கசிந்த படம்

விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இதனால், ஓடிடியிலும் பெரும் தொகைக்கு விற்பனையானது. ஆனால் படம் எப்போது ரிலீஸ் என்பதே தெரியாத நிலையில், ஓடிடி உரிமையையும் வாங்கிய நிறுவனம் ரத்து செய்துவிட்டது. பின்னர் இணையதளத்திலும் ஜனநாயகன் லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.

விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தர முடிவு?

விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்பாக இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னமும் சென்சார் சான்று கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்காக வாங்கிய பணத்தை விநியோகஸ்தர்களுக்குத் திருப்பித் தந்துவிடுங்கள் என தயாரிப்பாளர்களிடம் விஜய் சொன்னதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புதிய தகவல்

இதையடுத்து, ஜனவரி 9-ல் வெளியாகாமல் 6 மாதங்கள் தாமதமானதால், விநியோகஸ்தர்களுக்கு வட்டியுடன் பணத்தைத் திருப்பியளிக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க முடிவெடுத்து இருப்பதால் படம் தற்போதைக்கு வெளியாக வாய்ப்பு இல்லையா? என்ற பேச்சும் எழத்தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT