சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவின் முன் ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீநாத் உள்பட பலரை கைது செய்தனர். இதில் ஸ்ரீநாத் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு, சென்னை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ். ரம்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வக்கீல் ஜி.தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியனும், மனுதாரர் ஸ்ரீநாத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.