தமிழக முதல் அமைசரும் தவெக தலைவருமான விஜய்யின் நடித்துள்ள படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைபதில் ஏற்பட்ட சிக்கலால் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தை பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆனால், இந்த படம் திரையரங்களுக்கு வருவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேரை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகியோரை சைபர் கிரைம் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட மூவரில் ஒருவர் முக்கிய குற்றவாளி எனவும், அவர் மற்றொரு திரைப்படத்தில் ப்ரீலான்சர் முறையில் உதவி எடிட்டராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரத்தில் மேலும் ஒருவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் 10-வது நபர் கைதாகியுள்ளார். கைதான நபர் ஐடி ஊழியர் என்று சொல்லப்படுகிறது.