விஜய் ‘ஜனநாயகன்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச் வினோத் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,
தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கேவிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார்.
இயக்குநர் எச். வினோத்,“ பல தடைகளைத் தாண்டி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ திரைப்படம். விஜய் அவர்களுக்கு தனது கடைசி படம் இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் இருந்திருக்கலாம். பல கதைகளை கேட்ட பிறகு விஜய் இந்த படத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே. படம் இணையத்தில் கசிந்தாலும் முன்பதிவு நன்றாக இருக்கிறது. படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம். ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம்.. ஒற்றுமையை பேசும் படம்.. வெறுப்புக்கு எதிரான படத்தின் மீது வெறுப்பை திணிப்பது சரியில்லை.
‘ஜனநாயகன்’ படம் லீக் ஆனபோது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இரண்டு மூன்று முறை அழுதேன்.. எனினும், தயாரிப்பாளர் கே.வி.என் மற்றும் நடிகர் விஜய் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள். படம் வெளியீட்டுக்கு முன்பே லீக் ஆன போதிலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது.. விஜய் மீதான மரியாதையாலும் நேர்மையாலும் தியேட்டரைத் தேடிவரும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய சல்யூட். ” என கூறியுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு “ஜனநாயகன் படத்தில் கரூர் சம்பவம் குறித்த காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.. அது வதந்தி.. இதுபோன்ற பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் செயல் அறமற்றது” என்றார்.