சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி ஒப்பந்தம் ரத்து- படக்குழுவுக்கு கோடி கணக்கில் இழப்பு

ஆன்லைன் கசிவு காரணமாக, படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருந்த நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், தணிக்கை வாரிய மறுஆய்வில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளனர். பின்னர், ‘ஜனநாயகன்’ படத்தை வரும் மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், வெளியீட்டு தாமதம் மற்றும் ஆன்லைன் கசிவு காரணமாக, படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருந்த நிறுவனம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் புதிய ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.

ஆனால், படம் கசிந்ததை காரணமாகக் கொண்டு புதிய ஒப்பந்தம் குறைந்த தொகையில், சுமார் ரூ.50 கோடிக்கு மட்டுமே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‘ஜனநாயகன்’ படக்குழுவிற்கு சுமார் ரூ.70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.