பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான தடாக் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட பல்வேறு இந்திப் படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான தேவரா திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். மேலும், ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ள பெத்தி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த ஜான்வி கபூர், தமிழ் திரையுலகில் எப்போது அறிமுகமாகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கவுள்ள 'குரத்தி' வலைத் தொடரின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.