தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விளையாட்டை மையமாகக் கொண்டு அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படம் வெளியானதைத் தொடர்ந்து, ஜான்வி கபூரின் கதாபாத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில், கதாநாயகிக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், அவரை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகவும் சில ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், கதாபாத்திரம் அளவுக்கு மீறிய ஆபாசத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இயக்குநர் புச்சி பாபு சனா மறுத்துள்ளார்.
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்திற்காக ஜான்வி கபூர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூரின் திரைப்பயணத்தில் இதுவரை அவர் பெற்ற சம்பளங்களிலேயே இதுவே அதிகபட்ச தொகை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘தேவரா’வுக்காக ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
‘பெத்தி’ திரைப்படத்தின் மூலம் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ள ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்.