வாஷிங்டன்,
ஹாலிவுட் திரையுலகின் ஆக்ஷன் கதாநாயகன் ஜேசன் ஸ்டேதம். இவரது படங்கள் அதிரடி சண்டை காட்சிகளுக்காக பெயர் பெற்றவையாகும். பாக்சிக் உள்ளிட்ட தற்காப்பு கலைப் பயிற்சிகளை பெற்றவரான ஜேசன் ஸ்டேதம், தனது படங்களில் வரும் ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் அவரே ரிஸ்க் எடுத்து நடித்துவிடுவார் என்பதால், உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களிடையே ஜேசன் ஸ்டேதம் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அந்த வகையில், ஜேசன் ஸ்டேதம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆக்ஷன் திரைப்படம் ‘மியூடினி’ (Mutiny), உலகம் முழுவதும் வரும் 21-ந்தேதி(நாளை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ஜேசன் ஸ்டேதம் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மியூடினி’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் இன்று தவறுதலாக வெளியாகியுள்ளது. அமெரிக்க பயனாளர்களின் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த படம் வெளியானதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஓ.டி.டி.யில் இருந்து படம் நீக்கப்பட்டது.
இருப்பினும் இது குறித்து அமேசான் பிரைம் நிறுவனம் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதனிடையே, இணையத்தில் ஜேசன் ஸ்டேதம் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். தவறுதலாக திரைப்படம் வெளியாவதற்கு காரணமான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த தவறுக்காக நடிகர் ஜேசனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.