சினிமா செய்திகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் ஜெயராமும் சேர்ந்து நடித்துள்ளோம் - நடிகை ஊர்வசி

பாண்டிராஜ் இயக்கும் ‘பரிமளா & கோ’ படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு நடித்துள்ளார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரிமளா & கோ’.இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் சாண்டி மாஸ்டரின் ‘பரிமளா & கோ’ படத்தின் ‘வாச்சா உடாத’ வீடியோ பாடல் வெளியானது.

விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகை ஊர்வசி, “என்னைப் பொறுத்தவரை இந்த படம் மிகவும் சிறப்பான ஒன்று. ஒரு நடிகராக வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே “இந்த கதைதான் உண்மையான ஹீரோ” என்று நம்பிக்கை தரும் கதைகள் அமையும். இந்த கதையை முதலில் கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாக கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தின் மீது எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனெனில், நாங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம்.

பல கதைகள் எங்களிடம் வந்திருக்கின்றன. சிலது எனக்கு பிடிக்கும், சிலது ஜெயராமுக்கு பிடிக்காது. ஆனால் இந்த கதை வந்தபோது இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது வெறும் சீரியஸான கதை மட்டும் இல்லை; உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை. மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். என்னால் சில நாட்களில் முழுமையாக ஒத்துழைக்க முடியாத சூழ்நிலைகளும் இருந்தன. மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அங்கிருந்து இங்கே பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து இந்த படத்தை செய்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.” என்றார்.