சினிமா செய்திகள்

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருதை வென்ற “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”

புதுச்சேரி அரசின் திரைப்பட விழா வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. வரும் 12ம் தேதி மாலை கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமான தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள்’ வழங்கப்படும். 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களின் இயக்குநர்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற திரைப்படம் திரையிடப்படும். இந்த தொடக்க விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லைம்லைட்’ பிரிவில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ஏற்கனேவே தேர்வானது குறிப்பிடத்தக்கது.கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்வாகியிருந்தது.