சென்னை,
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, “இந்தி சினிமாவுக்கு ‘துரந்தர்’ எப்படி அமைந்ததோ, அதேபோல் தமிழ் சினிமாவுக்கு 'அரசன்' அமையும். இது சிறிய படம் அல்ல; இப்படத்திற்காக சிறு வயது முதல் பல்வேறு வயது தோற்றங்களில் நடித்துள்ளேன் ”என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'அரசன்' படம் உருவாகி வருகிறது. ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடசென்னை கதைக்களத்தில் தயாராகி வரும் இப்படத்தின் முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிம்பு, 'அரசன்' படம் பற்றி பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
அதில், 'அரசன்' திரைப்படம் அடுத்த ஆண்டு (2027) பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக பொங்கலுக்கு படம் ரிலீசாகவில்லை. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் அனைவருமே பெருமைப்படும் வகையில் 'அரசன்' படம் தரமான சம்பவம் செய்யும். 'அரசன்' படத்தின் முக்கிய கிளிம்ப்ஸ் காட்சிகள் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியாகும், என்று சிம்பு குறிப்பிட்டார்.
மேலும், “இந்தி சினிமாவுக்கு ‘துரந்தர்’ எப்படி அமைந்ததோ, அதேபோல் தமிழ் சினிமாவுக்கு ‘அரசன்” அமையும். இது சிறிய படம் அல்ல; இப்படத்திற்காக சிறு வயது முதல் பல்வேறு வயது தோற்றங்களில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் முழுமையை விரும்புபவர் என்பதால் பல நிஜமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என்றார். 'அரசன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.