சினிமா செய்திகள்

“சிஸ்டம்” படத்தின் வெற்றியை கடவுளுக்கு சமர்ப்பித்த ஜோதிகா

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் ஜோதிகா நடித்த ‘சிஸ்டம்’ படம் கடந்த 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம்‘சிஸ்டம்’ . இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாகும்.

இதில் சோனாக்சி சின்ஹா வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜோதிகா எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள்? அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ‘சிஸ்டம்’ படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ‘சிஸ்டம்’ வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக ஜோதிகா, படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “இதையெல்லாம் அவள் (தேவி) தான் நடத்துகிறாள் என்று எனக்குத் தெரியும். சிஸ்டம் படத்திற்கு தகுதியான வெற்றியை தந்ததற்காக மகாலட்சுமி தாய்க்கு நன்றி கூறி இந்த பயணத்தை நிறைவு செய்கிறோம். தேவி மகா சக்தி எப்போதும் நமக்கு ஆற்றலை வழங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிகா பகிர்ந்த இந்தப் பதிவில் அவரது கணவர் சூர்யா, இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி உடன் இருந்துள்ளார்கள். சூர்யாவின் கருப்பு படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.