சினிமா செய்திகள்

'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங்' விருதை வென்று பாலிவுட்டில் முத்திரை பதித்த ஜோதிகா

'சிஸ்டம்' வெப் தொடரில் நடித்த ஜோதிகாவிற்கு 2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான 'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது' வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜோதிகா, தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது 'சிஸ்டம்' வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அவருக்கு 2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான 'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது' வழங்கப்பட்டுள்ளது.

'சிஸ்டம்' வெப் தொடருக்கு கிடைத்த வரவேற்பு

நடிகர் சூர்யாவின் மனைவியும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையுமான ஜோதிகா, சமீபத்தில் இயக்குநர் அஸ்வினி அய்யர் திவாரி இயக்கத்தில் உருவான 'சிஸ்டம்' வெப் தொடரில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடித்தார். இந்த வெப் தொடர் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஜோதிகாவின் இயல்பான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எனது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த அங்கீகாரம்

இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான 'ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது' ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது குறித்து ஜோதிகா கூறுகையில், "மொழி எல்லைகளைத் தாண்டி, நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் புதிய கதைக்களத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். சினிமாவில் எனது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமே இந்த விருது" என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து வரும் ஜோதிகாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.