சினிமா செய்திகள்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட “காளிதாஸ் 2”

‘காளிதாஸ் 2’ படத்துக்கு சர்வதேச அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ஸ்ரீ செந்தில் இயக்கி நடிகர் பரத் நடித்த ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது

பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் இயக்கி 2018ல் வெளியான படம் ‘காளிதாஸ்’.அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதன் இரண்டாம் பாகத்தையும் இதே கூட்டணி அஜய் கார்த்தி, ‘பூவே உனக்காக’ சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உருவாக்கினார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியானது.

இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்திருந்தனர். ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.

‘காளிதாஸ் 2’ படத்துக்கு சர்வதேச அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது. சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன.

உலகளவில் 125 நாடுகளின் சுமார் 4100 திரைப்படங்கள் நடப்பு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தது. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருக்கிறது.

‘காளிதாஸ் 2’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது இத்திரைப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.