சினிமா செய்திகள்

காஜல், ஸ்ரேயாஸ் நடிக்கும் “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டி.கே.சேட்டன் இயக்கத்தில் காஜல், ஸ்ரேயாஸ் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு படங்கள் நடிப்பதை குறைத்தார். அளவான படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார்.

சாகர் பி.ஷிண்டே தயாரிப்பில் டி.கே.சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் முன்னணி நடிகரான ஸ்ரேயாஸ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சாகர் பி.ஷிண்டே கூறும்போது, “நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

‘தி இந்தியா ஸ்டோரி’ படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.