கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது ‘உலகத் தமிழர்களுக்கு ஒரு பெருமிதமான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்
2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 'தமிழ் வம்சாவளி' நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நவநீதம் 'நவி' பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்ட அவர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவது பாராட்டுக்குரியது.
இந்த நிலையில், நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு கமல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!” என்று கூறியுள்ளார்.