பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நானா படேகர். இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்திலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள நானா படேகருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.
நடிகர் நானா படேகர் நெஞ்சுவலி காரணமாக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 75. பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நானா படேகரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நானா படேகர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “நானா படேகரின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர் ஒரு அபாரமான கலைஞர் மட்டுமல்ல; அதைவிட சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார். அவர் ஒரு இயற்கை சக்தியைப் போன்றவர். தன்னைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை உயர்த்தியவர்.
திரைத்துறையைத் தாண்டி, மகாராஷ்டிர விவசாயிகளுக்கு அவர் செய்த உதவிகளும், கார்கில் போரின்போது அவர் ஆற்றிய தன்னார்வ சேவையும், அவரது ஆழமான கடமை உணர்வை வெளிப்படுத்துகின்றன. அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மராத்தி நாடகம், மராத்தி மற்றும் இந்தி திரையுலகில் நானா படேகர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது இறுதிச்சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.