சினிமா செய்திகள்

ஆர்.பி.சவுத்ரி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர் - கமல்ஹாசன் இரங்கல்

ஆர்.பி.சவுத்ரி நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ஜீவாவின், தந்தையும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.சவுத்ரி தனது சொந்த ஊருக்கு சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.பி.சவுத்ரி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சவுத்ரி சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது.

சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர்.

அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.