விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ‘பத்தா’ திரைப்படக் குழுவை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியான 3 ஆவது திரைப்படம் ‘பத்தா’. கடந்த அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.
ரவுடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், இப்படம் இதுவரை ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார். படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ‘பத்தா’ திரைப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், தயாரிப்பாளர் அட்லீ, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர்கள் ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
முன்னதாக, ‘பத்தா’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.