இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘டோரதி’ திரைப்படம் குறித்து தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாடினார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது
இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
இளையராஜா இசையில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், திருநங்கைகளின் வாழ்வியல், பாலியல் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை மற்றும் திருநங்கையர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தைரியமாகப் பேசியதற்காகப் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ‘பாலின உணர்திறன் மற்றும் பாலினப் பொறுப்புள்ள காவல் பணிக்கு ஊடகமாகத் திரைப்படம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநரும், ஐஜிபி-யுமான செந்தில் வேலன் ஐபிஎஸ் இந்தச் சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கலந்து கொண்டு தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவலர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடந்த கலந்துரையாடல் குறைத்து பதிவிட்டுள்ளார். அதில் “திரைப்படங்கள் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தான் எப்போதும் நம்புவதாகவும், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்குச் சென்று ‘டோரதி’ படம் மற்றும் அதன் சமூகம் சார்ந்த கருத்துகள் குறித்து காவலர்களுடன் உரையாடியது நீண்ட காலம் நினைவில் நிற்கக்கூடிய ஒரு சிறந்த அனுபவம். தமிழ்நாடு திரைப்பட ஆணையத்திற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.