கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, விது ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், கதாநாயகன் நவீன் சந்திரா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “படங்கள் இயக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. ஒரு வழியாக இயக்குநரான பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இதற்கு முன்பு நான் எடுத்திருக்கக் கூடிய திரைப்படங்களில் ‘கார்த்திக் சுப்புராஜ் வழங்கும்’ திரைப்படம் என தான் போடப்பட்டிருக்கும். இருப்பினும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளராக என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என நானே கேட்டுக் கொண்டேன்.
இந்த திரைப்படத்தின் கதைக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. ஏனெனில், என்னுடைய முதல் குறும்படமே ‘காட்சிப்பிழை’. அதன் மூலமாகவே இப்போது நான் இயக்குநராக உயர்ந்திருக்கிறேன். ‘காட்சிப்பிழை’ குறும்படமானது, ஒவ்வொரு ஊரிலும் விமானம் பறக்கும்போது எந்த மாதிரியான உணர்வு உள்ளூர்வாசிகளுக்கு ஏற்படும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் விமானம் பறக்கும்போது, அவர்கள் எப்படி பயப்படுவார்கள் என்பதை அந்த படம் உணர்த்தியது. அதன் மூலமாகவே இயக்குநராக உருவெடுத்தேன்.
இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் எனக்கு ‘வைரலிஸ்ட்’ என்ற ஆங்கில திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயலின் இசை மீது ஆர்வம் கொண்ட ஒருவன் போர் பதற்றம் உள்ள நேரத்தில் என்ன செய்வான் என்பது தான் அப்படத்தின் கதை. அதேபோல இந்தப் படத்திலும் காட்சிகளானது உணர்ச்சிப்பெருக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இலங்கை தமிழர்களைப் பற்றி இதுவரை பார்க்காத கேட்காத கதையாக இத்திரைக்கதை இருக்கும்.
இலங்கையில் போர் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடைபெறுகிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதே படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பின்னணி. இதனை இன்றைய காலகட்டத்தில் அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். ஏனெனில், ஈரானில் சண்டை நடைபெறுவதால் நமக்கு இங்கு சமையல் எரிவாயு பிரச்சினை ஏற்படுகிறது. அதுபோல நிச்சயமாக அனைவரும் இந்த கதையை தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்” எனக் கூறினார்.