இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது
இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது.
‘டோரதி’ திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இளையராஜாவிற்கு படக்குழு மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடியது. பல காட்சிகளில் படத்தின் உயிரோட்டத்தை மேலும் மெருகேற்றியது இளையாராஜாவின் இசை தான், அதிலும் படத்தின் கிளைமேக்ஸில் வைக்கப்பட்ட முத்துமணி பாடல் காண்போருக்கு மன நெகிழ்வை கொடுக்கும்விதமாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், ‘டோரதி’ திரைப்படம் வெளியான சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு ‘டோரதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பையும், சமூக ஊடகங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ படத்தில், ரிஷிகாந்த், சனந்தின் நடிப்பு கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.