சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்பராஜின் புதிய படம்... 'டோரதி' பர்ஸ்ட் லுக் வெளியீடு

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 10-வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு 'டோரதி'என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், படம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இடம்பிடித்திருப்பது படக்குழுவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

10-வது படத்தில் புதிய கூட்டணி

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக முழு படத்திற்கு இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'டோரதி' பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்திற்கு 'டோரதி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) உலகளவில் முதன்முறையாக திரையிடப்பட அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ்

இத்திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.