தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியிருந்தது. இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்.” என கண்ணீருடன் கூறியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.