சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா,ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ இன்று வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்தடுத்த காட்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.