சினிமா செய்திகள்

சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்த கயாடு லோஹர்.. ஏன் தெரியுமா?

சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சென்னை,

கன்னட திரைப்படமான 'முகில்பேட்டை' மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு சிறிது ஓய்வு

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், "சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கிறேன். சில நேரங்களில் உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல, மனதிற்கும் ஓய்வு அவசியம். வாழ்க்கையின் வேகத்தை சற்று குறைத்து, திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையுடனும், என்னுடனும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

'விரைவில் மீண்டும் சந்திப்போம்'

மேலும் தனது பதிவில், "எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து, அன்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்கமாட்டேன். இருப்பினும், முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், எனது குழுவினர் இந்த கணக்கின் மூலம் பகிர்வார்கள். அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், அன்பும் கிடைக்கட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கயாடு லோஹரின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.