தேனி,
கவிஞர் வைரமுத்து, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தனது சொந்த ஊரான வடுகபட்டிக்கு சென்றார். அங்கு தனது விவசாய நிலத்தில் உலா வந்து இளைப்பாறி கவிதை ஒன்றும் படைத்துள்ளார். அதில், 'இந்த நிலம் தான், நான் முதல் கவிதை எழுதிய இடம். 11 வயதில் மூளைக்குள் ஒரு மொழி மேகம் திரண்டதும், துளித்துளியாய் தூறலிட்டதும் இந்த விவசாய வெளியில் தான்.
தலைக்கு மேல் அதே வானம். காலுக்கு கீழ் அதே பூமி. ஆனால் அதே நான் அல்ல. அன்று பாடிய பறவை இன்றில்லை. சுற்றியுள்ள மரங்களை போலவே, என் தலையும் குறைந்திருக்கிறது.
ஆனால் எனக்குள் தமிழ் தூண்டிவிட்ட துளி தீ அதே சுடரோடு, அணையாமல் இருக்கிறது. என் முதல் நிலமே, அணையாமல் காத்திரு, நீ மூட்டிக்கொடுத்த முதல் தீயை. இன்னும் இன்னும் எரியவிடு, எரிமலைகள் சிதறவிடு. சுத்த நெருப்பால் என்னை சூரியன் செய். ஆட்சிகள், காட்சிகள், காலம், கடவுளும் மாறலாம். தமிழும், நானும் மாறாமல் பார். கட்டை நெருப்பு காணும் வரை நெற்றி நெருப்பு அணையாமல் காத்திரு. உடலை முறுக்கேற்று, உயிரை பன்மை செய். வணங்குகிறேன் மண்ணை. வாழ்த்து நீ என்னை' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.