சினிமா செய்திகள்

ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவகாரத்தில் மவுனம் கலைத்த கெனிஷா!

“என்னை விமர்சிப்பதற்கு முன் நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்” என்று கூறி கெனிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கெனிஷாவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “என்னை விமர்சிப்பதற்கு முன் நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்” என்று கூறி கெனிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்ததுடன், உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன். பின்னர் நடந்த திருமண வாழ்க்கையில் குடும்ப வன்முறையால் கருவில் இருந்த குழந்தையையும் இழந்தேன். இந்த துயரங்களில் இருந்து மீள்வதற்கே பல போராட்டங்களை சந்தித்தேன். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?

ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு எடுக்கக்கூடியவர் அவர்தான். அப்படி இருக்கும்போது என்னை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பற்றி பேசுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.