சினிமா செய்திகள்

“கும்பமேளா புகழ்” மோனலிசா கடத்தல் வழக்கு - கணவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனாலிசா மைனர் என்பது விசாரணையில் உறுதியானதையடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டினர்.

காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர். நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்தார்.

சமீபத்தில் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் வந்திருந்த மோனலிசா கேரளாவில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவை சேர்ந்த முகம்மது பர்மான் என்பவரை காதலித்து வந்த மோனலிசா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பூவார் அருமனூர் நயினார் கோவிலில் திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணத்தை பலரும் ‘லவ் ஜிகாத்’ என்று விமர்சித்து வரும் நிலையில் மோனலிசா “நான் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொண்டேன். இது ‘லவ் ஜிகாத்’ கிடையாது. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எல்லா மதங்களையும் சமமாகவே கருதுகிறேன். இது எனது சுய விருப்பத்தின் பேரில் நடந்த திருமணம். கேரளா எங்களுக்கு பாதுகாப்பான இடமாகத் தெரிந்ததால் இங்கு திருமணம் செய்துகொண்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

மோனாலிசாவுக்கு இன்னும் 18 வயது நிறைவடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேசிய பழங்குடியினர் கமிஷனின் பதிவேட்டின்படி, அவர், 2009 டிசம்பர் 30ல் பிறந்துள்ளார். ஆனால், திருமணம் நடந்த கோவிலில், 2008, ஜனவரி 1ல் பிறந்ததாக போலி ஆவணத்தை அவர் சமர்ப்பித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்ததாக, மோனாலிசாவின் கணவர் பர்மான் கான் மீது மத்திய பிரதேச போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மோனாலிசா ஒரு மைனர் என்பது விசாரணையில் உறுதியானதையடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்காக வயது சான்றிதழ்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆவண மோசடி தொடர்பாக மத்தியப் பிரதேச போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மோனலிசாவின் தந்தை அளித்த புகாரில் ‘இத்திருமணம் செல்லாது’ என போலீசார் நடவடிக்கை எடுக்க தேசிய பழங்குடியின ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பர்மான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய கேரள ஐகோர்ட் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், மோனலிசாவை கடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் கணவர் முகமது பர்மானின் முன் ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.