கொச்சி
‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.
இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ‘கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விசாரித்த கேரள ஐகோர்ட், படத்தை பார்ப்பதாக கூறியிருந்தது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நீதிமன்றங்கள் பொதுவாக கலை வெளிப்பாட்டில் தலையிடத் தயங்கினாலும், கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. 'தி கேரளா ஸ்டோரி 2' நாளை வெளியாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்ககூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது வக்கீல் ஸ்ரீகுமார் 2 நிமிட டீசரை மட்டும் வைத்து நிவாரணங்களை வழங்க முடியாது என்று வாதிட்டார்.
படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது என்றும், மத்திய திரைப்பட வாரியம் அதைச் சான்றளித்தவுடன், ஐகோர்ட்டு அதன் சொந்தக் கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வாதிட்டார். டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் "கேரள மக்களின் கூட்டு கண்ணியத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் படத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பின்பற்றவில்லை என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.