சமூக வலைத்தளங்களில் தங்களது மலிவான விளம்பரத்திற்காக தனது மகள்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வரும் நபர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் குஷ்பூ கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் இணைந்த குஷ்பூ. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இவர் ‘ஆரம்பம்’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இளைய மகள் ஆனந்திதா டீனேஜராக இருந்தபோது உடல் பருமனால் அவதிப்பட்டார். உடல் எடை அதிகமாக இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனந்திதாவின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து அவரின் எடையை மக்கள் விமர்சனம் செய்தார்கள். ஆனந்திதா விரைவில் படத்தை இயக்க உள்ளார்.
தனது குடும்பப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, அவதூறு பரப்புபவர்களை நோக்கிப் பதிவிட்டுள்ளார்.
அதில் “நானும் என் கணவர் சுந்தர் சி-யும் எங்கள் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்துடனும் சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம். அவர்கள் எங்களின் பிரபல அந்தஸ்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்களின் அழுக்கு பிடித்த, வக்கிரமான மனநிலையை நான் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல.
வெறும் இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காகவும், வியூஸ் மற்றும் பாலோயர்களைப் பெறுவதற்காகவும் பிரபலங்களின் குடும்பத்தினரை, குறிப்பாகப் பெண்களைக் குறிவைக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு எனது கண்டனங்கள். “ஒரு தாயிடம் விளையாடாதீர்கள்”. தன் குட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு காயம்பட்ட புலி நான். இனி பொறுத்துக்கொள்ள முடியாது, போதும்.” என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த ஆவேசப் பதிவிற்கு ஆதரவாக, மூத்த நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களைத் துன்புறுத்துவதற்கான உரிமம் அல்ல. விமர்சனம் என்பது கொடூரமாக இருக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது. ஒரு பிரபலமான பெண்ணின் மகள்களைக் கேலி செய்வது நகைச்சுவை அல்ல; அது அப்பட்டமான கோழைத்தனம். ஒருவருடைய தோற்றம் என்பது சாதனையோ அல்லது தோல்வியோ அல்ல, அவர்களின் குணமே முக்கியம். ஒரு பெண்ணை விமர்சிக்கலாம், ஆனால் அவளுடைய குழந்தைகளை கேலி செய்வது நாகரிகம் அல்ல. அது ஒரு சமூகத்தின் ஒழுக்கத் தோல்வி. நான் குஷ்பு மற்றும் அவரது மகள்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்றார். இதற்காக குஷ்பு, ராதிகாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு குஷ்புவின் இளைய மகள் ஆனந்திதா, நேர்காணல் ஒன்றில் தான் சிறுவயதிலிருந்தே எதிர்கொண்ட இணைய வழித் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
சமீபத்தில் தன்னைத் திருநங்கையோடு ஒப்பிட்டுப் பலர் கேலி செய்வதாகவும், அது தன்னை காயப்படுத்துவது மட்டுமன்றி, அத்தகைய கருத்துக்கள் சமூகத்தின் அறியாமையையும் திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச மனநிலையையும் காட்டுகிறது என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
23 வயதான ஆனந்திதா சுந்தர், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘தக் லைப்’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபென்சி’ திரைப்படத்தின் படைப்புத் தயாரிப்பாளராக குஷ்புவின் இளைய மகள் அவந்திகா பணியாற்றியுள்ளார். தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில் எல்லையை மீறும் ட்ரோல்களுக்கு எதிராக குஷ்பு மற்றும் ராதிகா எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.