சினிமா செய்திகள்

கேபிஒய் பாலாவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விமல் குமார் இயக்கத்தில் கேபிஒய் பாலா நடிக்கும் ‘ரீமேட்ச்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி வரும் கே.பி.ஒய் பாலா, திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தில் பாதியை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் திரைப்படம் மற்றும் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வரும் அவர், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். சின்னத்திரையில் விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைப் பேச்சாளராகவும் தொகுப்பாளராகவும் பங்கேற்றுள்ளார். இவர் பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடித்துள்ளார். பாலா கதாநாயகனாக அறிமுகமான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், பாலா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ரீமேட்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விமல் குமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டார். பாலாவோடு இணைந்து சந்தோஷ் பிரதாப், தனு ஹர்ஷா மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அச்சு ராஜாமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் இதுவாகும்.

SCROLL FOR NEXT