சினிமா செய்திகள்

ஆடை சர்ச்சை: நடிகை கீர்த்தி சனோனின் விளம்பரத்தை நீக்கிய நகைக்கடை நிறுவனம்

நகைக்கடை விளம்பரத்தில் நடிகை கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை மற்றும் அவர் நாய்க்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் சர்ச்சையானது.

பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய நகை நிறுவனத்தின் ரக்‌ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பிரபல நகைக்கடை நிறுவனம், ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் நடித்த விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை பண்டிகையின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்றும், உடலின் கழுத்துப்பகுதி மிகவும் திறந்த நிலையில் உள்ள ஆடையை அணிந்து கொண்டு ரக்‌ஷா பந்தன் கொண்டாடுவது போலக் காட்டப்பட்டதும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அந்த விளம்பரத்தில் அவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய பண்டிகையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

கங்கனா ரனாவத்

நடிகை மற்றும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், “சகோதரனுக்கு ராக்கி அணியும்போது இப்படிப்பட்ட உடையை அணிவார்களா?. பெண்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என விமர்சித்திருந்தார்.

கிருத்தி சனோன் பதிலடி

இதற்​கு கீர்த்தி சனோன் “பண்​டிகை​களின் சாராம்​சம் அணி​யும் ஆடைகளில் இல்​லை; பாரம்​பரி​யத்​தின் மீது கொண்​டுள்ள உணர்​வு​களி​லும் அர்த்​தத்​தி​லும்​தான் உள்​ளது. ரக்‌ஷா பந்​தன் என்​பது பாது​காப்​பின் பந்​தம். நானும் என் சகோதரியும் ராக்கி கட்​டிக்கொள்​கிறோம். ஒரு சகோ​தரன் எப்​படிப் பாது​காப்​பான உணர்​வைத் தரு​வானோ, அதே​போல் எங்​களை நாங்​கள் பாது​காத்​துக் கொள்ள முடி​யும் என்​பதை அறிவோம். நாங்​கள் ஒரு​வருக்​கொரு​வரின் உடல்​நலம், மகிழ்ச்சி மற்​றும் நீண்ட ஆயுளுக்​காகப் பிரார்த்தனை செய்கிறோம். இந்​தப் பிரார்த்​தனை​யும் வாக்​குறு​தி​யும் எங்​கள் வீட்டு நாய்​களுக்​கும் உண்​டு. அது​வும் எங்​கள் குடும்ப உறுப்​பினர்​தான். மேலும், பெண்​கள் என்ன உடை அணிய வேண்​டும் என்று சொல்​வதை எப்​போது நிறுத்​தப் போகிறோம்? பாரம்​பரிய பேஷன் மாறி​விட்​டது, ஆனாலும் ஒரு பெண்​ணின் கலாச்​சா​ரத்​துக்​கான மரி​யாதை அவளது ஆடைகளைக் கொண்டே அளவிடப்​படு​கிறது. பண்​பாடும் பாரம்​பரிய​மும் அவளது ஆடைகளில் இல்​லை, இதயத்​தில்​தான் இருக்​கிறது” என்று தெரி​வித்​திருந்​தார்.

நடிகை கீர்த்தி சனோனுக்கு ராகுல் காந்தி ஆதரவு

இந்த விவகாரத்தில் கிருத்தி சனோனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை சமூக வலைதளங்கள் மூலம் விமர்சித்து கட்டுப்படுத்தக் கூடாது என்றும், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடை நிறுவனத்தின் அறிக்கை

விளம்​பரம் சர்ச்​சையானதை அடுத்து நகைக்கடை நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் அகற்றியது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த நிறுவனம், குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே தங்கள் நோக்கமாக இருந்தது என்றும், சில பிரிவினரின் மனதை அறியாமல் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி விளம்பரத்தை வாபஸ் பெற்றது.

சமூக வலைதளங்களில் விவாதம்

கிருத்தி சனோனின் ரக்‌ஷா பந்தன் விளம்பரத்தை சுற்றி எழுந்துள்ள இந்த விவகாரம், தற்போது ஆடைத் தேர்வு மட்டுமின்றி பெண்களின் சுதந்திரம் மற்றும் பாரம்பரிய கலாச்சார எதிர்பார்ப்புகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.