2000-ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அதன் பிறகு திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் மீண்டும் பெல்பாட்டம் என்ற படத்தின் மூலம் அக்சய் குமாருடன் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில், அவர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 12 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, வான்வழி போக்குவரத்து சீரானதை அடுத்து, துபாயிலிருந்து நடிகை லாரா தத்தா இந்தியா திரும்பியுள்ளார்.
தான் ஒரு ஸ்டுடியோவில் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், மேலே இருந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாகவும் நடிகை லாரா தத்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார். துபாயில் சிக்கித் தவித்த பின்னர் சமீபத்தில் இந்தியா திரும்பிய நடிகை சோனல் சவுகான், லாரா தத்தாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவரது பாதுகாப்புக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை லாரா தத்தா துபாயிலிருந்து தனது 14 வயது மகள் சாய்ராவும் இந்தியா திரும்பியுள்ளார். “துபாயில், விமான நிலையத்தில் இருந்து வெறும் 10 கி.மீ தூரத்தில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே தினந்தோறும் குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்து 2 மணிநேரம் காரில் பயணித்து, விமானம் பிடித்து திரும்பி வந்த அனுபவம் மிக கொடுமையானது. அந்த அதிர்ச்சியில் இருந்து என் மகள் வெளிவர ரொம்ப நாள் ஆகும்” என்று லாரா தத்தா கூறியுள்ளார்.