தவெக-வின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கடந்த 12ஆம் தேதி நடந்த அவர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி அரசியல் நுழைவு குறித்து பேசியிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதாவது ரஜினிகாந்தை திமுக குடும்பம் மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டதாகவும், கடைசியில் அவர் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸில் நடிக்க போய்விட்டதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், “அது உண்மைக்கு மாறான கருத்து என விளக்கமளித்து காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என விளக்கமளித்திருந்தார். இதையடுத்து ஆதவ் அர்ஜூனா, நான் சொன்ன நோக்கம் வேறு என்றும் அதற்காக வருத்தத்தையும் மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் லதா ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “அது உண்மையில்லை என்றும் தவறான அவதூறுகளை பரப்பக்கூடாது என்றும் ரஜினி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை படித்தாலே புரியும். ஒரு கருத்து தவறாக இருந்தால் அது எல்லோரையும் பாதிக்கும்” என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து “கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் இணையும் படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. இது மிகவும் உற்சாகமான தருணம். பெருமையான தருணம். அவரது (ரஜினிகாந்த்) நீண்ட கால சினிமா பயணத்திற்கு இறைவனின் அருளும், ரசிகர்களின் அன்பும், அவரது கடின உழைப்புமே காரணம் என்று மிகவும் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.