சினிமா செய்திகள்

’ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை - படக்குழு எச்சரிக்கை

எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ கூடாது என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது 'ஜன நாயகன்' படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த சூழலில், நேற்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் ஜனநாயகன் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கே.வி.என். சட்ட ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.