சினிமா செய்திகள்

‘இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை இணைந்து ரசிப்போம்’ - நயன்தாராவுக்கு திரிஷா வாழ்த்து

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா வெளியிட்டுள்ள அன்பான வாழ்த்துப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை,

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

20 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, விஜய்யுடன் ‘சிவகாசி’, அஜித்துடன் ‘பில்லா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

42-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா

நயன்தாரா நேற்று (நவம்பர் 18) தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன. மேலும், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வகையில், நடிகை திரிஷா தெரிவித்த வாழ்த்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

‘இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை இணைந்து ரசிப்போம்’

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதனுடன், “எதிர்காலத்தில் இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை இணைந்து ரசிக்க வாழ்த்துகள்” என்ற அன்பான வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு மூலம் நயன்தாரா மீதான தனது அன்பையும் நட்பையும் திரிஷா வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த அழகான புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. திரிஷாவின் இந்தப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

SCROLL FOR NEXT