சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 10ந் தேதி வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு தொடர்பாக ஏற்பட்ட சுவாரஸ்யமான பின்னணியை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ‘எல்.ஐ.சி.’ (Love Insurance Corporation) என்ற பெயர் வைக்க திட்டமிடப்பட்டதாக கூறினார். ஆனால் அந்த பெயரை பயன்படுத்துவதற்கு Life Insurance Corporation of India (LIC) நிறுவனம் ரூ.112 கோடி தொகை கோரி நோட்டீஸ் அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் பிரச்சினைகளை முன்கூட்டியே கணித்த விக்னேஷ் சிவன், ‘LIP’, ‘LIT’, ‘LIK’, ‘LIF’ என 4 மாற்று தலைப்புகளை தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறினார். இறுதியாக அவற்றில் இருந்து ‘LIK’ (எல்.ஐ.கே) என்ற தலைப்பை இந்த படத்திற்கு பயன்படுத்தினேன் என்றார்.