அல்லு அர்ஜுன் உடனான படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ஏஏ23’ திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ‘புஷ்பா’ படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி கவனத்தைப் பெற்றது. அனிருத் இசையமைத்த பின்னணி இசையும் வைரலானது. ரூ. 700 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் ஐதராபாத்தில் உள்ளார். அங்கு, படப்பிடிப்பு திட்டங்கள் மற்றும் எழுத்து பணிகளும் நடைபெற்று வருகிறதாம். அட்லீ இயக்கும் ‘ராக்கா’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அல்லு அர்ஜுன் அந்த படப்பிடிப்பை முடித்த கையுடன், லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சுவாரஸ்யமான அப்டேட்கள் விரைவில் வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.