சினிமா செய்திகள்

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் சவுபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுபின் சாகிர் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி இந்த படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சவுபின் சாகிர். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சவுபின் சாகிருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்களுடன் கூலி படத்தில் பணி புரிவது ஒரு அற்புதமான அனுபவம் சவுபின் சாகிர் சார். உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சவுபின் சாகிருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் லோகேஷ்.

SCROLL FOR NEXT