சென்னை,
'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
சமீபத்தில் ரஜினியை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'டிசி' என்ற படத்திலும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 'தேவதாஸ்' என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கிளிம்ஸ் வீடியோவில் பாலியல் தொழிலாளிகளாக வாமிகாவும் சஞ்சனாவும் நடிக்க, கேங்ஸ்டராக லோகேஷ் நடித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்தப் படமும் பழிவாங்கும் கதையாகவே உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக கடந்த ஏப்ரலில் நிறைவடைந்ததாகப் படக்குழு கூறியிருந்தது. அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகியவை பழிவாங்கல் கதையாகவே உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 15ம் தேதி திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.