'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் முக்கிய சிறப்பாக, இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
'மஞ்சணத்தி' திரைப்படம், மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'வாழை' படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமைப் பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான 'மஞ்சணத்தி' படத்தின் தலைப்பு அறிவிப்பும், கிளிம்ப்ஸ் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 'மஞ்சணத்தி' திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் சமீபத்திய நேர்காணலில் பேசியுள்ளார். அதில், "'மஞ்சணத்தி' படத்தில் நடிப்பதற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் விருப்பம். அந்த வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜின் தாயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வரும் 'மஞ்சணத்தி' திரைப்படம் 2027-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.