மும்பை,
எனது திருமணங்கள் எதுவும் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.
இந்தி நடிகர் அமீர்கான், கடந்த 5-ந்தேதி மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அழகுக்கலை நிபுணர் கவுரி ஸ்ப்ராட் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார்.
இந்தி நடிகர் அமீர்கானின் 3-வது திருமணம் குறித்து மகராஷ்டிர பா.ஜ.க மந்திரி நிதேஷ் ரானே கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது. இந்து சமூகம் அதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்றும், அமீர்கானின் இந்த 3-வது திருமணத்தை ஏன் ‘லவ் ஜிகாத்’ என்று பார்க்கக்கூடாது என்றும் பா.ஜனதா மூத்த தலைவரும், மாநில மந்திரியுமான நிதேஷ் ரானே கேள்வி எழுப்பியிருந்தார்.
சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான சஞ்சய் சிர்சாத் ‘லவ் ஜிகாத்தின் விளம்பர தூதர்’ என்று கூறியிருந்தார்.
இந்தச் சர்ச்சைக்கு அமீர் கான் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “எனது குடும்பம் எப்போதும் மதங்களுக்கு இடையேயான உறவுகளை ஏற்றுக்கொள்கிறது. எனது திருமணங்கள் எதுவும் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்திருமணத்தில் எந்த மத மாற்றமும் இருந்ததில்லை. உண்மை என்னவென்றால், எங்களுடைய குடும்பம் மிகவும் வித்தியாசமானது. எனது சகோதரிகள் இருவரும் இந்துக்களை திருமணம் செய்தவர்கள்.
எனது மகளும் இந்துவை மணந்துள்ளார். எனது உறவினர் மன்சூர் ஒரு கிறிஸ்தவரை மணந்துள்ளார். நான் சிவில் திருமணம் செய்து கொண்டதால் கவுரி , கிரண் மற்றும் ரீனா மூவரும் தங்கள் மதத்தை மாற்றவில்லை. கவுரி இந்து இல்லை, அவர் பிறப்பால் கிறிஸ்தவர். ஆனால் கிறிஸ்தவ மதத்தை அவர் பின்பற்றுவதும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்தார். 2002 விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவைத் திருமணம் செய்து 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். தற்போது கவுரி ஸ்ப்ராட் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.