சினிமா செய்திகள்

ஜென்சி தலைமுறையின் காதலை பேசும் “லவ் மேட்டர்” திரைப்படம்

‘லவ் மேட்டர்’ திரைப்படத்தில் இளசுகளைக் கவரும் வகையில் ‘லுங்கி பாய்ஸ்’ புகழ் ராஜ்பிரியன் கலகலப்பான பாடலை பாடியுள்ளார்.

இன்றைய ஜென்சி தலைமுறையினரின் காதலையும், வாழ்க்கைப் புரிதலையும் மையமாக வைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்’.

ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிக்கும் ‘லவ் மேட்டர்’ படத்தை, மகாதாரா பகவத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.கே.திவாகர் இயக்கிய ‘கீனோ’ திரைப்படத்தில் மகாதாரா பகவத் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் பாடல்கள்

இத்திரைப்படத்தில் இளசுகளைக் கவரும் வகையில் ‘லுங்கி பாய்ஸ்’புகழ் ராஜ்பிரியன், "கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி" என்ற கலகலப்பான பாடலைப் பாடியுள்ளார். இதுமட்டுமின்றி, இப்படத்தில் அவர் மற்றொரு பாடலையும் பாட உள்ளார். மேலும், இப்படத்தின் முதல் பாடலான "ஆரம்பம் ஆரம்பம்" என்ற பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.என். சுரேந்தர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜென்சி பாணியில் காதலும் வாழ்க்கையும்

"காதலிக்கும்போது வாழ்க்கை புரியாது; வாழ்க்கை புரியும்போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொண்டு வாழ வேண்டும்" என்ற கருத்தை, இன்றைய இளம் தலைமுறையினருக்குப் பிடித்தமான ஜென்சி பாணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் பேசுகிறது.

கல்லூரி மாணவர்களின் கூட்டணி

இப்படத்தின் மூலம் இயன் கதாநாயகனாகவும், அபிநயா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் இயக்குநர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஸ்ரீவி, திலீப், ஆர்.ஜே. பொற்கொடி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மகாதாரா பகவத் மற்றும் இன்ஸ்டாகிராமில் செல்லப்பிராணிகளுடன் வீடியோ வெளியிட்டு 'அன்பு சார்' எனப் பிரபலமான தயாரிப்பாளர் செல்வ அன்பரசன் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஆவர்.

தொழில்நுட்பக் குழு

இப்படத்திற்கு இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களே என்பது இப்படத்தின் தனிச்சிறப்பாகும். இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை கோவிந்தராஜ் மேற்கொள்கிறார்.

SCROLL FOR NEXT